பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 4 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-16 23:52 GMT

சென்னை,

2022-23-ம் ஆண்டுக்கான இந்து அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணிசாமி கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தண்டாயுதபாணி சாமி திருக்கோவில் தொடக்கப்பள்ளி மற்றும் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம் பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கிவைத்தார்.

கோவில் நிதியில் இருந்து செலவிடப்படும்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், காணொலி காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வேலுச்சாமி எம்.பி., கலெக்டர் விசாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தொலைவில் இருந்து கல்வி பயில வந்தாலும், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் காலை சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல், இட்லி அல்லது ரவா உப்புமா, கிச்சடி ஆகியவற்றுடன் சட்னி, சாம்பார் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதற்காக ஏற்படும் செலவுத்தொகை கோவில் நிதியில் இருந்து செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்