காலை உணவுத் திட்டம்: தெலுங்கானா அதிகாரிகள் சென்னை வருகை - தயாரிப்பது, பரிமாறப்படுவது குறித்து கேட்டறிந்தனர்
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை பார்வையிட தெலுங்கானா மாநில அதிகாரிகள் நேற்று வந்திருந்தனர். அவர்கள் உணவு தயாரிப்பது, பரிமாறப்படுவது குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 31 ஆயிரத்து 8 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சுமார் 18 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று, அங்கு பள்ளிகளின் உள்கட்டமைப்பு, திட்டங்கள் குறித்து கேட்டறிந்து திரும்பினார்.
இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா மாநிலத்தின் முதல்-மந்திரியின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கிறிஸ்டினா சொங்து, கல்வித்துறை செயலாளர் கருணா வக்காட்டி, முதல்-மந்திரியின் சிறப்பு பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறை சிறப்பு செயலாளர் பாரதி ஹொல்லிக்கேரி ஆகிய 5 அதிகாரிகள் நேற்று தமிழகம் வந்து இருந்தனர்.
அவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேற்று காலை பார்வையிட்டனர்.
சென்னை ராயபுரம், எஸ்.என்.செட்டி தெரு, ஜி.சி.சி. பழைய பள்ளிக் கட்டிட வளாகத்தில் காலை உணவுத் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள சமையல் அறைகளை பார்த்தனர். அங்கு உணவு தயாரிக்கப்படும் முறை, உணவுக்கு பயன்படுத்தும் பொருட்கள் எவை?, தயாரிக்கப்படும் உணவு எவ்வாறு குறித்த நேரத்தில் சுடச்சுட சப்ளை செய்யப்படுகிறது? என்பது போன்ற பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர்.
அவர்களின் சந்தேகங்கள் மற்றும் அவர்களுக்கான தகவல்களை முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் எடுத்துக் கூறினார். அப்போது உணவில் சிலவற்றை அவர்கள் ருசியும் பார்த்தனர்.
அதனைத்தொடர்ந்து ராயபுரம் ஆர்த்தூன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று அங்கு மாணவ-மாணவிகளுக்கு எவ்வாறு உணவு பரிமாறப்படுகிறது? என்று பார்த்ததோடு, சுவை, தரம் குறித்து மாணவ-மாணவிகளிடம் கேட்டு அறிந்தனர். இதனையடுத்து கிராமப்புற பகுதிகளில் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்றும் அவர்கள் பார்வையிட உள்ளனர்.
இதுபற்றி முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் நிருபர்களிடம் கூறும்போது, 'தெலுங்கானா அதிகாரிகள் இந்த திட்டம் பற்றி அம்மாநில முதல்-மந்திரியிடம் அறிக்கையாக கொடுக்க உள்ளனர். தெலுங்கானாவை போல, மற்ற மாநிலங்களில் இருந்து வந்து பார்வையிட வந்தாலும், அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்து தருவோம்' என்றார்.