2 ஆயிரத்து 285 மாணவர்களுக்கு காலை உணவு

2 ஆயிரத்து 285 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

Update: 2022-10-25 19:00 GMT


தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் மாநிலம் முழுவதும் 1,545 பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல் ஒன்றிய பகுதியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் 14 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1,233 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் சமையல் கூடம் அமைத்து உணவு தயாரிக்கப்படுகிறது. மேலும் கொடைக்கானல் ஒன்றியத்தில் 34 பள்ளிகளில் பயிலும் 1,052 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அதை அந்தந்த பகுதிகளை சேர்ந்த சுயஉதவிக்குழுவினர் தயாரித்து வழங்குகின்றனர்.


இதன்மூலம் மொத்தம் 48 பள்ளிகளில் 2 ஆயிரத்து 285 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வெண்பொங்கல்-காய்கறி சாம்பார், ரவா காய்கறி கிச்சடி, அரிசி உப்புமா-காய்கறி சாம்பார், வரகு பொங்கல்-காய்கறி சாம்பார், சாமை கிச்சடி, ரவா கேசரி உள்ளிட்டவை காலை உணவாக வழங்கப்படுகின்றன. இந்த காலை உணவு தினமும் காலை 7.30 மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்