வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம்- நகை கொள்ளை
கடையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் பணம் மற்றும் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
கடையம்:
கடையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் பணம் மற்றும் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பணம்- நகை கொள்ளை
கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில் மகன் மன்சூர் அலிகான் (வயது 45). இவர் தென்காசியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இதனால் அவ்வப்போது முதலியார்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் நேற்று மாலை மன்சூர் அலிகான் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த சுமாா் ரூ.7 லட்சம் மற்றும் 28 கிராம் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
சூப்பிரண்டு பார்வையிட்டார்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) தெய்வம், கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் அங்கிருந்து சிறிது தூரம் அங்கும் இங்குமாக ஓடி மெயின் ரோடு வரை சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுதொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.