திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
திருத்தணி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 12 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, மாலை என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்த வகையில், இந்த ஆண்டின் மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் மாலை கோவில் வளாகத்தில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் எதிரே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவப்பெருமானுக்கு தீபாராதனை நடந்தது. அதன்பிறகு வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் உலா வந்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.