பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.;

Update:2022-09-28 04:24 IST

சமயபுரம்:

குணசீலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் புண்யாக வாசனம், பேரிதாடனம், திக் பந்தனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. கருடன் படம் வரையப்பட்ட கொடியுடன் கோவில் அர்ச்சகர்கள் மேளதாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். இதையடுத்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை பயபக்தியுடன் வழிபட்டனர். இரவில் கண்ணாடி அறை சேவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு சுவாமி பல்லக்கில் எழுந்தருளுகிறார். இன்று(புதன்கிழமை) ஹம்ச வாகனத்திலும், பின்னர் ஒவ்வொரு நாளும் முறையே ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் போன்ற வாகனங்களிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அக்டோபர் 4-ந் தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 6-ந் தேதி மாலை 4 மணிக்கு புண்யாகவாசனம், இரவில் தீபாராதனையும் நடைபெறுகிறது. 7-ந் தேதி இரவு 9 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் சேவை சாதிக்கிறார். இதைத்தொடர்ந்து கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்