திருவள்ளூர் மாவட்டம் நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

திருவள்ளூர் மாவட்டம் நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update:2023-06-15 16:50 IST

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவில். கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் வரை வருகின்ற 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் காலை, மாலை என இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு சிம்ம வாகனம், அம்சவாகனம், சூரிய பிரபை வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை வாகனம், யாளி வாகனம், யானை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி விழா நடைபெற உள்ளது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலை கருட வாகனத்தில் சாமி எழுந்தருளிய பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதை தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதனை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். வருகின்ற 18-ந் தேதி காலை 6 மணி அளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதைபோல் பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த ராள்ளப்பாடி கிராமத்தில் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகம் ஏழு ஊரு எல்லையை மிதிக்கும் நிகழ்ச்சியும், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பிரகாரப் புறப்பாடு வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ராள்ளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்