தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது
தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது
நன்னிலத்தில், தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய காதலனை போலீசார் கைது செய்தனர்.
நிதி நிறுவன பெண் ஊழியர்
நாகை மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் செல்ல பாண்டியன். இவரது மகள் அர்ச்சனா(வயது 24). இவர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே எழில் நகரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிதி நிறுவனத்தின் பின்புறம் வாடகை வீட்டில் தனது தோழியுடன் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று காலை அர்ச்சனா வழக்கம்போல பணிக்கு சென்றாா். மதியம் சாப்பிட வீட்டுக்கு சென்ற அர்ச்சனா நீண்ட நேரம் ஆகியும் அலுவலகத்துக்கு வரவில்லை.
தூக்கில் பிணம்
இதனால் சந்தேகம் அடைந்த அவரது தோழி ஒருவர் வீட்டுக்கு சென்று பாா்த்தாா். அப்போது வீ்ட்டில் இருந்த மின்விசிறியில் அர்ச்சனா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காதலன் கைது
விசாரணையில் அர்ச்சனாவும், நாகை மாவட்டம் வடகாடு பஞ்சநதிகுளம் பகுதியை சேர்ந்த சத்யராஜ்(26) என்பவரும் காதலித்து வந்ததும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
அர்ச்சனாவை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் சத்யராஜ் மீது நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.