மாடியிலிருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி -போலீசார் விசாரணை
கொடுங்கையூரில் மாடியிலிருந்து தவறி விழுந்து 2½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக பலியானது.;
கொடுங்கையூர்,
கொடுங்கையூர் காந்திநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (25). இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உண்டு. மூத்த மகன் சந்தோஷ் (வயது 8). அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். 2-வது மகன் துருவேஷ் (2½). கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவில் உள்ள சந்தியாவின் தாய் வீட்டில் 2-வது மகன் துருவேஷை விட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் குழந்தை துருவேஷை பிரபாகரன் மாமியார் வீட்டில் விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மாலை 4 மணியளவில் வீட்டின் முதல் மாடியில் விளையாடி கொண்டு இருந்தபோது, ஜன்னல் வழியாக மாடியில் இருந்து திடீரென துருவேஷ் தவறி கீழே விழுந்தான்.
சாவு
இதில் தலையில் பலத்த காயம் அடைந்து கிடந்த குழந்தை துருவேஷை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.