கவர்னர், முதல்-அமைச்சர் இருவரும் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்
இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
சென்னை,
'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை தனியார் விமானத்தில் கோவை செல்கிறார். அதே விமானத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் பயணம் செய்ய உள்ளார். அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செங்கோடு செல்கிறார்.
கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், அண்மையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக பேச தமிழக முதல்-அமைச்சருக்கு கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.