'பொருநை அருங்காட்சியகம் அடுத்த ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும்'-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அடுத்த ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும்’ என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.;

Update: 2023-05-22 19:42 GMT

'நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அடுத்த ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும்' என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அமைச்சர் ஆய்வு

நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த 18-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த பணிகள் தொடங்கி உள்ள நிலையில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

13 ஏக்கர் பரப்பு

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லையில் உலக தரத்துடன் அமைக்கப்படவுள்ள பொருநை அருங்காட்சியகம் எப்படி இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் பல வரைபடங்களை ஆய்வு செய்து சிறந்த வரைபடத்தை தேர்ந்தெடுத்து பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதிகளில் கண்டெடுக்கப்படும் தமிழர்களின் பண்டைய நாகரிக பொருட்களை இங்கு காட்சிப்படுத்த உள்ளோம். இது 13 ஏக்கர் நிலப்பரப்பில் தரை தளம், மேல் தளம் என்ற அடிப்படையில் கட்டப்படுகிறது. இந்த கட்டிடம் நெல்லை மக்களின் கலாசாரத்தையும், அவர்களுடைய பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்

நான்கு வழி நெடுஞ்சாலைக்கு மிக அருகில் இருப்பதால் கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு செல்பவர்கள் இங்கு வந்து அருங்காட்சியகத்தை பார்வையிடுவதன் மூலம் தமிழர்களின் தொன்மையையும் நாகரிகத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்த அருங்காட்சியக கட்டிடம் 10-11-2024-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.

பொதுப்பணித்துறையை பொருத்தவரை திட்டமிட்ட காலங்களுக்கு முன்பே பணிகள் சிறப்பாக தரமாக முடிக்கப்பட்டு திறக்கப்படுகிறது. அதுபோல பொருநை அருங்காட்சியகமும் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் ஜூன் 20-ந் தேதி சிறப்பு மருத்துவமனை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படுகிறது. ஜூலை மாதம் மதுரையில் கட்டப்பட்டுள்ள நூலகம் திறக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கட்டிடங்கள் திறக்கப்பட உள்ளது.

நெல்லை பழமையான நகரம். இதற்கு சுற்றுவட்ட சாலை மிகவும் அவசியம். சுற்றுவட்ட சாலை பணிகளுக்காக நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து சாலை அமைப்பதற்கான வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்.

ஈரடுக்கு மேம்பாலம்

நெல்லையில் உள்ள ஈரடுக்கு மேம்பாலம் மிகவும் பழமை வாய்ந்தது. அதனை தொன்மை அடிப்படையில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் நோக்குடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கிரீட் கல் பெயர்ந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து விட்டதை செய்திகள் மூலமாக அறிந்தேன். பணிகள் இன்னும் முடிவடையவில்லை நாளை (அதாவது இன்று செவ்வாய்க்கிழமை) அதனை ஆய்வு செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்வே மேம்பால பணிகள்

இதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பாளையங்கோட்டை மகாராஜாநகரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணிகள், குலவணிகர்புரம் ரெயில்வே கேட் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஞானதிரவியம் எம்.பி., கலெக்டர் கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப்யாதவ், அப்துல்வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர்கள் முருகேசன், சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர்கள் ஜெயராணி, முருகேசன், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் அருணாசலம், பாரம்பரிய கட்டிட பராமரிப்பு செயற்பொறியாளர் மணிகண்டன், வடக்கு விஜயநாராயணம் கூட்டுறவு சங்க தலைவர் இ.நடராஜன், தொழிலதிபர் இ.என்.மனோஜ், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்