அரியலூர் புத்தக திருவிழாவில் ரூ.45 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
அரியலூர் புத்தக திருவிழாவில் ரூ.45 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
தமிழக அரசின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய 7-வது புத்தக திருவிழாவை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 23-ந்தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 11 நாட்கள் நடந்த இந்த புத்தக திருவிழா நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. நிறைவு நாளில் நட்சத்திர பேச்சாளர் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு "சிந்தனை செய் மனமே" என்ற தலைப்பின் கீழ் பேசினார். புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர். அந்த வகையில் அரியலூரில் கடந்த 11 நாட்களாக நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ.45 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.