முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனம் அடஞ்சவளாகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக திருநாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து புத்தக தேர் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தை வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புத்தக தேர் வீதி உலா இடும்பாவனம் நூலகம் சென்றடைந்தது. பின்பு அங்கு மாணவர்களுக்கு கதை கூறுதல், வாசித்தல் மற்றும் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நூலகர் சுதாசாந்தி வரவேற்றார். இதில் வட்டார கல்வி அலுவலர் ராமசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியர் பயிற்றுனர்கள் ஸ்ரீதரன், தினேஷ், அடஞ்சவளாகம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பூங்கொடி நன்றி கூறினார். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.