வெடிகுண்டு பிரிவு போலீசார் சோதனை
வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் வெடித்த சம்பவத்தில் ஜமேசாமுபின் உயிரிழந்தார். இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை செய்து வருகிறது. கோவை கார்வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும்பொருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான குழுவினர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் வெடிகுண்டு பிரிவு போலீசார் வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையம், கோட்டை நுழைவுவாயில், ஸ்ரீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.