எடப்பாடி அருகே ஏரியில் மிதந்த பெயிண்டர் பிணம்-கொலையா? போலீசார் விசாரணை
எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளி பகுதியில் உள்ள ஏரியில் பெயிண்டரின் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
எடப்பாடி:
ஏரியில் பிணம்
எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி கிராமத்தில், எடப்பாடி-கோனேரிப்பட்டி பிரதான சாலையை ஒட்டி ஏரி உள்ளது. இந்த நிலையில் நேற்றுஅதிகாலை அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள், ஏரியின் ஒரு பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு, பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புபடையினர் அங்கு விரைந்து வந்து ஏரியில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பெயிண்டர்
போலீசாரின் விசாரணையில், ஏரியில் பிணமாக மிதந்தவர், ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூரைச் சேர்ந்த பெயிண்டர் சரவணன் (வயது 45) என்பதும், அவர் கடந்த 30-ந் தேதி அன்று வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்து விட்டு, மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்வதாக கூறிச் சென்றவர் ஏரியில் பிணமாக மிதந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து விருந்தாளியாக வந்த நபர் ஏரியில் மூழ்கி இறந்தது எப்படி? அவர் கொலை செய்யப்பட்டாரா? என பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏரியில் பிணமாக மிதந்த பெயிண்டர் சரவணனுக்கு மனைவி மற்றும் ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.