கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே முட்புதரில் எரிந்த நிலையில் தொழிலாளி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே முட் புதரில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-05-18 22:53 IST

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே முட் புதரில் ஒரு ஆண் நபரின் உடல் முழுமையாக எரிந்த நிலையில் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முட் புதரில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது முதற்கட்ட விசாரணையில் இறந்து போன நபர் கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்த குட்டி நாயக்கர் (வயது 65), கூலித்தொழிலாளி என்பது தெரிய வந்தது. இவரது மனைவி பிரிந்து சென்ற காரணத்தால் மனமுடைந்து தனக்குத்தானே உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இருந்தாலும் இறந்து போன குட்டி நாயக்கர் உண்மையிலே தனக்குத்தானே உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்துவிட்டு உடலை தீவைத்து எரித்தார்களா? என்ற கோணத்திலும் கூடுவாஞ்சேரி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்