பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு சவாரி - அதிகாரி தகவல்
பூண்டி நீர்த்தேக்கத்தில் விரைவில் படகு சவாரி துவக்கப்படும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தலைமை பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.;
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்நிலையில் ஏரியின் உயரத்தை 2 அடி உயர்த்தி கூடுதலாக 1.5 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் உலக வங்கி ஆலோசகர் சூபே தலைமையில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் முரளிதரன், திட்டம் மற்றும் வடிவமைப்பு தலைமைப் பொறியாளர் பொன்ராஜ், கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவிப் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தது. சுற்றுலா தலமாக விளங்கும் பூண்டி ஏரியில் விரைவில் படகு சவாரி துவக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மழைக்காலங்களில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பும் போது உபரி நீரை மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த கொசஸ்தலை, கூவம் ஆற்று ஆறுகளில் உலக வங்கி நிதியைக் கொண்டு தடுப்பணைகள் கட்ட உள்ளோம்.
இவ்வாறு தலைமை பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.