கன்னியாகுமரியில் 3-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வால் படகு சேவை தாமதம்

கன்னியாகுமரியில் 3-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வால் படகு சேவை தாமதமானது.

Update: 2023-10-01 19:15 GMT

கன்னியாகுமரி:

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதன்படி விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்க்க படகுத்துறைக்கு வந்தனர்.

ஆனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு சேவை கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக இயக்கப்படவில்லை. பிறகு மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு 2 மணி நேரம் தாமதமாக அதாவது 10 மணிக்கு சேவை தொடங்கியது.

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து விட்டு திரும்பினர். கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக தொடர்ந்து 3-வது நாளாக படகு சேவை தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

--

Tags:    

மேலும் செய்திகள்