கண்களை கட்டிக்கொண்டு திருப்பதிக்கு நடைபயணம் செல்லும் தொழிலாளி
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டி தொழிலாளி கண்களை கட்டிக்கொண்டு திருப்பதிக்கு நடைபயணம் செல்கிறார்.;
ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, அம்மணாங்கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை ராஜவீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கூலி வேலை செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டி, திருப்பதி கோவிலுக்கு தனது இரு கண்களையும் மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு பாதயாத்திரை வருவதாக வேண்டி ஒரு வருடமாக விரதம் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவர் அங்குள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பாதயாத்திரையை தொடங்கினார். ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ஆர்.ரமேஷ், பாச்சல் ஒன்றியக் குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் சீனிவாசனின் இரண்டு கண்களையும் மஞ்சள் துணியால் கட்டி பாதயாத்திரையை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து சீனிவாசன் கண்களை கட்டியபடி, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் திருப்பதிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாரதி உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.