நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்படும்: பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நம்பிக்கை
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி ஈடேறினால், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்படும் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவாரூர்,
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் பங்கேற்க முடியவில்லை. என்றாலும், தனது உரையை அனுப்பியிருந்தார். அதை திருச்சி சிவா எம்.பி. மேடையில் படித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அஞ்சலி
என்னுடைய நினைவில் இருக்கின்ற மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் இந்த தருணத்தில், கலைஞர் கோட்டம் திறக்கப்பட்டிருக்கிறது.
கலைஞர் கருணாநிதிக்கு எனது உளமார்ந்த வணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொது வாழ்வில் 80 ஆண்டுகள்
கருணாநிதி, தனது 14-வது வயதில் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து, அதற்கு பின் 80 ஆண்டுகள் தீவிர, முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அதற்கும் மேலாக அவர் தி.மு.க. தலைவராக 50 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இது இந்த நாட்டில் எந்த தேசிய கட்சி தலைவருக்கும், மாநில கட்சி தலைவர்களுக்கும் கிடைத்திராத ஒரு மிகப்பெரிய பேறு. கருணாநிதி வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டில் சமூகநீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் அரும்பாடுபட்டவர்.
ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களின் உரிமைகளுக்காகவும், பெண்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காகவும் அரும்பாடுபட்டவர். பிற்படுத்தப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்காக ஏழைகளுக்காக உழைத்ததே அவருடைய புகழுக்கு மிக முக்கியமான காரணம். அவர் மாற்றம் ஏற்படுத்திய கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் என்றென்றும் நிச்சயமாக வாழ்ந்து கொண்டிருப்பார்.
தன்னுடைய இளம் வயதில் திரையுலகில் புகழ்மிக்க வசன கர்த்தாவாக பரிணமித்த கருணாநிதி தமிழ் இலக்கியத்துக்கும், கலாசாரத்துக்கும் ஆற்றிய பங்கு அளப்பறியது.
திராவிட இயக்கத்தின் கொள்கை
அவர் எழுதிய கதைகளும், நாடகங்களும், வசனங்களும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்தன.
நான் கருணாநிதியை கடைசியாக 2017-ம் ஆண்டு அவருடைய பிறந்தநாள் விழாவில் சந்தித்தேன். அவர் மீது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை எல்லா காலங்களிலும் இருந்தது உண்டு. 1991-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க.வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத காலத்தில் நான் ஜனதாதள எம்.பி.யாக இருந்தேன்.
தி.மு.க. வெற்றி பெறும் என்றேன்
நாடாளுமன்றத்தில் தி.மு.க.வுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்கிற உறுப்பினராக நான் செயல்பட்டு இருக்கிறேன். 2017-ம் ஆண்டு அவருடைய பிறந்தநாளுக்கு நான் வந்தபோது தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது. அப்போது நான், 'தி.மு.க. அடுத்த தேர்தலில் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவார்' என்று பேசினேன்.
2018-ம் ஆண்டு கருணாநிதி மறைந்த போது அஞ்சலி செலுத்த வந்தேன். மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று உறுதிப்பட தெரிவித்துவிட்டு சென்றேன். என் விருப்பம் நிறைவேறி உள்ளது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று மாநிலத்துக்கு மிகப்பெரிய தொண்டாற்றி வருகிறார்.
தொழிலாளர்கள் மீதான தாக்குதல்
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகுவதாக பரவலாக தகவல் பரவியது. அதற்கு ஆதாரமாக புனையப்பட்ட 'வீடியோ' காட்சியும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.
இதுதொடர்பாக சிலர் என்னை சந்தித்தார்கள். நான் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினேன். உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம் இது குறித்து தீவிரமாக விசாரித்து, இது தவறான தகவல் என்றும், வதந்தி என்றும் தெளிவுப்படுத்தினார்கள். பீகாரில் இருந்து அதிகாரிகள் குழுவும் தமிழ்நாட்டுக்கு வந்து விசாரணை நடத்தி, அது போன்ற பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்று உறுதிப்படுத்தினார்கள்.
எதிர்க்கட்சிகள் கூட்டம்
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும், பாதுகாப்பையும் எப்போதும் தர தயார் என்ற நம்பிக்கையையும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. பீகார் மாநில தொழிலாளர்களும், பிற மாநில தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் பன்னெடுங் காலமாக நலமுடன் வாழ்வதை நாங்கள் அறிவோம். குறிப்பாக பீகார் மக்கள் இங்கே அன்புடன், நேசத்துடன் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். வருகிற 23-ந் தேதி அன்று பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும் முக்கியமான கூட்டம் நடைபெற உள்ளது. அதில் உங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த இந்த முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். இந்த ஒற்றுமை நாங்கள் எண்ணுகிற மாதிரி ஈடேறுமேயானால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்படும் என்ற நம்பிக்கையை தெரிவிக்க விரும்புகிறேன்.
தி.மு.க. வலிவு பெறும்
இந்த நேரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ராசா உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் உறுதியாக நம்புகிறேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. வலிவு பெறும், ஒளிவு பெறும். கருணாநிதியின் கொள்கைகளை நிச்சயம் நடைமுறைப்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.