பா.ஜ.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - மத்திய இணை மந்திரி எல். முருகன் பேட்டி
மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்று எல்.முருகன் கூறியுள்ளார்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண்,என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவும், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். சுமார் 1300 ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்ட மேடை, மற்றும் பொதுமக்கள் அமரும் பகுதி, உணவு கூடம், சுகாதார வளாகம், ஹெலிகாப்டர் இறங்குதளம், சுமார் 28 இடங்களில் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில்,மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
தமிழகம் ஒரு மிகப்பெரிய திருவிழாவை பார்க்க இருக்கிறது. திருவிழாவிற்கு பிரதமர் மோடி பல்லடம் வருகை தர உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை தொடங்கப்பட்டது. மக்களின் ஆதரவாலும், பேரன்பினாலும் இந்த யாத்திரை பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றுள்ளது.
பல்லடத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் என்பது தமிழக அரசியலில் இதுவரை நடக்காத ஒரு நிகழ்வாக இருக்கும். என் மண் என் மக்கள் யாத்திரைக்கு பிறகு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும். 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மீண்டும் பா.ஜ.க.வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார், மற்றொரு அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகமாகி வருகிறது. போதை பொருள் கடத்துபவர்களுக்கு தி.மு.க.அரசு பாதுகாப்பு அளிக்கிறது. பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களை பார்த்து மாற்றுக் கட்சியில் இருந்து பலர் பா.ஜ.க.,வில் இணைகின்றனர். மாற்றுக் கட்சிகளை உடைத்து எம்.எல்.ஏ.,எம்.பி.,களை பா.ஜ.க.,வில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.