கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் பலி

போடி அருகே கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் பலியானார். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-19 21:00 GMT

பா.ஜ.க. பிரமுகர் பலி

போடி அருகே உள்ள மலைக்கிராமமான முந்தல் பகுதியை சேர்ந்தவர் பிரஜேஷ் (வயது 45). இவர் போடி ஒன்றிய பா.ஜ.க. செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் நேற்று மாலை தனது மாடுகளுக்கு புல் அறுக்க சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் போடி-குரங்கணி சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். தகவலறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆத்திரத்தில் விபத்தை ஏற்படுத்திய காரை தாக்கி சேதப்படுத்தினர்.

சாலை மறியல்

பின்னர் பிரஜேஷ் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் குரங்கணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வேண்டும். பலியானவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் கூறினர்.

அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் மறியலை கைவிடவில்லை. இரவு 7 மணியில் இருந்து சுமார் 3½ மணி நேரம் சாலை மறியல் நடந்தது.

இதனால் போடிமெட்டு சாலையில் முந்தல் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. அதன் பின்னர் போலீசார் மீண்டும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த தேனி என்.ஆர்.டி.நகரை சேர்ந்த கணேஷ்குமார் (32) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்