எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது

எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது

Update: 2023-04-01 19:42 GMT

அமலாக்க துறையை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என திருநாவுக்கரசர் எம்.பி. குற்றம் சாட்டினார்.

பேட்டி

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. எண்ணம் ஈடேறாது

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் கிராமங்கள் தொடங்கி வட்டார, மாவட்ட, மாநிலம், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம். நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறோம்.

மோடி அரசு கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது. ராகுல்காந்தியை மிரட்டி பணிய வைப்பதற்காக, என்றைக்கோ பேசிய பேச்சை வைத்து வழக்கு போட்டு பதவியை பறித்து முடக்க நினைக்கின்றனர். பா.ஜ.க.வின் எண்ணம் ஈடேறாது.

எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைக்க முயற்சி

அதேபோல் டெல்லி துணை முதல்வர் சிசோடியா, லல்லு பிரசாத் யாதவ், சந்திரசேகர ராவ் மகள் கவிதா ஆகியோர் மீது வழக்குகள் போட்டும், அமலாக்கத்துறையை கையில் வைத்துக்கொண்டும் எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது.

பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பல பேர் பல ஆண்டுகளாக அரசு வீட்டை காலி செய்யாமல் உள்ளனர். ராகுல் காந்திக்கு பதவி போன மறுநாளே வீட்டை காலி செய்யச்சொல்கின்றனர். சர்வாதிகார மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

தாமதமின்றி நடைபெற நடவடிக்கை

பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையும், கவர்னரும் மாணவர்கள் நலன் கருதி பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதமின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிங்காரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்