மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்த பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

ஒன்றியம் தோறும் வார இறுதி நாட்களில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என்று திருவண்ணாமலையில் நேற்று நடந்த பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-03-15 17:53 GMT


திருவண்ணாமலை,

ஒன்றியம் தோறும் வார இறுதி நாட்களில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என்று திருவண்ணாமலையில் நேற்று நடந்த பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா.ஜ.க. மகளிர் அணி கூட்டம்

வேலூர் பெருங்கோட்ட பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயற்குழு கூட்டம், மகளிர் தினத்தை முன்னிட்டு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள லோட்டஸ் மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மகளிர் அணி மாவட்ட தலைவர் கலாவதி தலைமை தாங்கினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி மாவட்ட பார்வையாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான சோபனாராணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில தலைவி உமாரதிராஜன் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிக்கு மகளிர் அணியினர் மேற்கொள்ள பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து அவர் பல்வேறு துறையில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்கள் 10 பேருக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருதினை வழங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

பாழடைந்து வரும் புராதான கோவில்களை கண்டறிந்து மகளிர் அணி சார்பில் சீரமைப்பது. ஒன்றியம் தோறும் வார இறுதி நாட்களில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துவது.

இல்லம் தேடி கல்வி திட்டம்

கொண்டம் காரியந்தலில் உள்ள எஸ்.டி. மக்கள் குடியிருப்பு பகுதியில் பொது சுகாதார வளாகம் அரசு அமைத்து தர வேண்டும். நாராயணகுப்பம் நரிகுறவர் மக்கள் சுமார் 90 குடும்பங்கள் குடியிருக்கும் பகுதியில் அரசு பொது சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும்.

சுமார் 10 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தையும் முறையாக செயல்படுத்த வேண்டும்.

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் உள்ள குப்பை கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மகளிர் அணி மாவட்ட பார்வையாளர் எஸ்.பி.கே. சுப்பிரமணியம், மகளிர் அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் எச். கிருஷ்ணசாந்தி, மாநில மகளிர் அணி பார்வையாளர் பரிமளா சம்பத், மாவட்ட பார்வையாளர் தசரதன், மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார், பெருங்கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் குணா உள்பட திருவண்ணாமலை தெற்கு, வடக்கு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்