ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளர் கார் எரிப்பு சம்பவம் - மேலும் ஒருவர் கைது..!
ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளரின் கார்களை எரித்த சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. ஆதரவாளரான அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் மனோஜ் குமாரின் 2 கார்களுக்கு கடந்த 23-ம் தேதி இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரம் ஆகியவற்றின் மூலம் சந்தேகத்திற்குரிய சிலரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையின் முடிவில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக முதல் கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்த சீனி முகம்மது என்பவரின் மகன் அப்துல் ஹக்கீம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியகுடி பகுதியை சேர்ந்த சாதிக் பாட்சா என்பவரின் மகன் அப்துல் அஜீஸ் (28), ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜிந்தா முகம்மது என்பவரின் மகன் செய்யது இப்ராஹிம்சா (27) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த கார் எரிப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணமாக கருதப்பட்ட ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் மகன் முகம்மது மன்சூர் (32) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த இவர் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் சிவகங்கை மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.