திட்டக்குடி நகராட்சியை கண்டித்து பாஜகவினர் திருவோடு ஏந்தி போராட்டம்

திட்டக்குடி நகராட்சியை கண்டித்து பாஜகவினர் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினா்.

Update: 2023-07-15 16:42 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் 50 பேர் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சாலையோரம் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து திடக் கழிவு மேலாண்மை இடத்திற்கு கொண்டு செல்வார்கள். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதுபற்றி அறிந்த திட்டக்குடி நகர பா.ஜ.க.வினர், நகர தலைவர் பூமிநாதன் தலைமையில் திட்டக்குடியில் உள்ள திடக் கழிவு மேலாண்மை அலுவலகம் முன்பு திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் கஜேந்திரசிங், ராஜா, கதிர்வேல், அய்யப்பன், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வராததால், அவர்களாகவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்