பா.ஜனதாவினர் வாழையை நட்டு நூதன போராட்டம்

சுசீந்திரத்தில் சேறும், சகதியுமாக மாறிய தேரோடும் வீதியை சீரமைக்கக்கோரி பா.ஜனதாவினர் வாழையை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-29 18:45 GMT

சுசீந்திரம்:

சுசீந்திரத்தில் சேறும், சகதியுமாக மாறிய தேரோடும் வீதியை சீரமைக்கக்கோரி பா.ஜனதாவினர் வாழையை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேறும், சகதியுமாக மாறின

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தேரோடும் வீதியில் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த பூமிக்கடியில் மின்வயர்கள் பதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுசீந்திரம் கோவில் நுழைவாயில் முதல் கோவில் கலையரங்கம் வரை உயர் மின்னழுத்த கம்பிகள் பூமிக்கடியில் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது.

தற்போது பெய்து வரும் மழையால் சேறும், சகதியுமாக இந்த சாலை மாறியது. இதனால் கோவிலுக்கு வருகின்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு இந்து சேவா சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வாழையை நட்டு போராட்டம்

இந்தநிலையில் நேற்று மீண்டும் பெய்த மழையால் தேர் வீதிகள் படுமோசமாக காட்சி அளித்ததால் பேரூராட்சி அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் திடீரென போராட்டம் நடத்தப்பட்டது. வாழையை சேறும், சகதியுமான இடத்தில் நட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுபாஷ் தலைமை தாங்கினார். விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் செண்பகவல்லி, வள்ளியம்மாள், வீரபத்திரப்பிள்ளை மற்றும் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கோரிக்கை

பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், வருகிற 11-ந் தேதி நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக சுசீந்திரம் நகரை சுற்றி திருவனந்தபுரத்திற்கு செல்லும் நிலையில் தேர்வீதிகள் சேதமடைந்துள்ளது. இதை விரைவில் சரி செய்து சாமி சிலைகள் நல்ல முறையில் செல்ல வேண்டும், மேலும் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ரூ.10 கோடி செலவில் கோவில் நகரம் முழுவதும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை சுசீந்திரம் மார்கழி தேர் திருவிழா முடிந்த பிற்பாடு தொடங்கி பணி செய்ய கேட்டுக் கொள்வது என கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் செயல் அலுவலர் கமலேஸ்வரியும், பேரூராட்சி தலைவர் அனுசுயாவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்