திமுக அரசு மீது பாஜக திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது: முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சனம்

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வதந்திகளை பரப்பி வருகிறார், திமுக அரசு கோவில்களை கொள்ளை அடித்து கொண்டிருப்பதாக பேசி இருக்கிறார் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.;

Update: 2023-11-24 09:53 GMT

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், திமுக பிரமுகர் திருமங்கலம் கோபால் இல்லத் திருமண விழாவை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்திவைத்தார். அப்போது முதல்-அமைச்சர் பேசியதாவது:

நான் பல நிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கிறேன். திமுகவுக்கு எத்தனையோ அணிகள் இருந்தாலும், இதைச் சொல்கின்ற காரணத்தால் மற்ற அணிகளைச் சார்ந்திருக்கக் கூடியவர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். எல்லா அணியைவிட ஒரு சிறந்த அணி இருக்கிறது என்றால் அது இளைஞரணி என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். அது எதார்த்த நிலை. அதை எல்லோரும் புரிந்துகொண்ட நிலைதான், அதனால் தவறாக நினைக்க வாய்ப்பே கிடையாது. அந்த இளைஞரணி இன்றைக்கு கம்பீரமாக உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்.

சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்களை குழப்பி வருகின்றனர். தேவையற்ற பிரசாரங்களை, பொய் செய்திகளை ஊடகம் மூலம் பரப்பி மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள். மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வதந்திகளை பரப்பி வருகிறார், திமுக அரசு கோவில்களை கொள்ளை அடித்து கொண்டிருப்பதாக பேசி இருக்கிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் இந்த கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். இதுவரை ரூ.5,500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான கோவில் சொத்துகள் திமுக மாடல் ஆட்சியில்தான் மீட்கப்பட்டு இருக்கிறது. நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார். உண்மையான பக்தியுடன் இருந்தால் திமுக ஆட்சியை பாராட்ட வேண்டும். திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்துவதற்காக திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருகின்றனர்" என குற்றச்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்