பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் மதுரவாயல் மேற்கு மண்டல தலைவருக்கு அடி- உதை
பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் மதுரவாயல் மேற்கு மண்டல தலைவரை ஒரு தரப்பினர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.;
தமிழகம் முழுவதும் நேற்று பா.ஜ.க. சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் 66 இடங்களில் நடைபெற்றது. அதன்படி சென்னை அம்பத்தூரில் சென்னை மேற்கு மண்டலம் சார்பாக பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ஜ.க. துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் தீர்மானங்களை வாசித்து கொண்டிருந்தார். அப்போது மதுரவாயல் மேற்கு மண்டல தலைவர் டி.டி.பி. கிருஷ்ணா, "எனக்கு பேச வாய்ப்பு கொடுங்கள்" என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது திடீரென ஒரு தரப்பினர் கிருஷ்ணாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் காயம் அடைந்த கிருஷ்ணாவை அவரது ஆதரவாளர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உதடு கிழிந்த நிலையில் அவருக்கு 5 தையல்கள் போடப்பட்டது. உட்கட்சி பிரச்சினை என்பதால் கிருஷ்ணா இதுபற்றி போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.