மக்களை பிரித்தாளக்கூடிய வேலையை பா.ஜனதா செய்கிறது தக்கலையில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி மக்களை பிரித்தாளக்கூடிய வேலையை பா.ஜனதா செய்கிறது என தக்கலையில் நடந்த பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டில் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.;

Update: 2023-06-25 21:22 GMT

தக்கலை:

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி மக்களை பிரித்தாளக்கூடிய வேலையை பா.ஜனதா செய்கிறது என தக்கலையில் நடந்த பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டில் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.

பெண்ணுரிமை சிறப்பு மாநாடு

தக்கலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு நடந்தது. கட்சியின் மாவட்ட செயலாளர் செல்ல சுவாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகம்மது முன்னிலை வகித்தார். தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் தீர்மானங்களை படித்தார்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா அரசு தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்திருந்தார்கள். தற்போது இதுகுறித்து பலமுறை குரல் எழுப்பியும் மத்திய அரசு காதில் வாங்கி கொள்ளாமல் உள்ளது.

பெண்கள் மீது அடக்குமுறை

பெண்கள் காலம்காலமாக இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்து வருகிறார்கள். எந்த சாதியாக, மதமாக இருந்தாலும் மீற முடியாத அளவுக்கு அடக்கு முறையை பெண்கள் சந்தித்து கொண்டிருக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல உலக அளவில் பெண்களை சரிசமமாக நடத்தக்கூடிய நிலை இன்னும் வரவில்லை. இன்னும் பெண்கள் தங்கள் உரிமைக்காக, ஊதியத்திற்காக, கல்விக்காக போராடி கொண்டிருக்கிறார்கள்.

அன்று உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களது ஓட்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் எந்த போராட்டமும் இல்லாமல் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது தமிழ்நாட்டில் தான். பெண்ணுரிமை பற்றி பேச முன்வராத காலத்தில், 'பெண்களின் கையில் உள்ள கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகங்களை கொடுங்கள்' என்று சொன்னவர் பெரியார். இந்த அடிதளத்தில் இருந்து தான் நம் நாட்டில் பெண்ணுரிமையை வளர்த்தெடுக்க வேண்டும்.

முத்தலாக்கிற்கு எதிரான மசோதா

காஷ்மீரில் சிறுமியை பாலியல் குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா ஊர்வலம் சென்றார்கள். இப்படி பட்டவர்களால் எப்படி பெண்களை பாதுகாக்க முடியும்.

முத்தலாக்கிற்கு எதிரான மசோதாவை நான் எதிர்த்தபோது ஏன் முஸ்லிம் பெண்கள் மீது அக்கறை இல்லையா? என மத்திய மந்திரி ஒருவர் கேட்டார். அவரிடம் சொன்னேன், 'ஒருமுறை முத்தலாக் செய்துகொண்டு அந்த பெண்ணை பிரிந்து சென்றவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கினால் அவருடைய குடும்பத்தை யார் பாதுகாப்பார்கள். அப்படியே அதுசரி என்று சொன்னால், இது மற்ற மதத்தில் உள்ள பெண்களுக்கு ஏற்படவில்லையா? உங்களது நோக்கம் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவானது அல்ல, ஆண்களை முடக்க வேண்டும் என்பதுதான்' என்றேன். மக்களை பிரித்தாளக் கூடிய வேலையைதான் பா.ஜனதா செய்து வருகிறது.

தமிழகம் முன்னிலை

உலகத்திலேயே பெண்களுக்கான கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. உயர்கல்வியில் 72 சதவீதத்தை எட்டியிருக்கிறோம். இதுவே தேசிய அளவில் 24 சதவீதமாகத்தான் உள்ளது. இதற்கு காமராஜர் காலத்தில் ஏராளமான பள்ளிகளை திறந்தார். இதனால் பெண்பிள்ளைகள் படித்தார்கள்.

ஆனால் தற்போது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கை சொல்லக்கூடியது என்னவென்றால் கல்லூரி கதவுகளை மூடிவிட்டு ஒரு வளாகத்தை உருவாக்க வேண்டும். அங்கு மாணவர்களை கொண்டு வந்து படிக்க வைக்க வேண்டுமாம். அப்படி செய்தால் பெண்கல்வி கேள்விக்குறியாக மாறிவிடும். நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. பாலியல் ரீதியான பிரச்சினை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நம் உரிமைக்காக போராட வேண்டியது உள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்

நமது நாட்டில் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தக்கூடிய காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவதற்கான பணிகளை இப்போதே முன்னெடுக்க வேண்டும். இதன்மூலம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கேரள முன்னாள் சுகாதார துறை மந்திரி ஸ்ரீமதி, மத்திய குழு உறுப்பினர் வாசுகி உள்பட பலர் பேசினர்.

மாநாட்டில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் எம்.பி.க்கள் ஹெலன் டேவிட்சன், பெல்லார்மின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்