அண்ணாமலை மாநில தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றிபெற வாய்ப்பு இல்லை- கோபியில் நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி
அண்ணாமலை மாநில தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று கோபியில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.;
கடத்தூர்
அண்ணாமலை மாநில தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று கோபியில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
சாத்தியமில்லை
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்து இனிமேல் தான் தெரியவரும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும். அவ்வாறு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வந்தாலும் 2026-ம் ஆண்டு கூட இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை.
ஜெயிலர் படம் பார்த்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்ல சென்றிருப்பார். ஓ.பன்னீர்செல்வம் தனி கட்சி தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. ஒருங்கிணைந்த அ.தி.மு.க. என்பது ஒரு மிகப்பெரிய பலம். இரட்டை இலை சின்னத்துக்கு தான் முதல் மரியாதை. யார் கட்சியில் செல்வாக்கு உள்ளனரோ அவர்கள் பின்னால் தான் கட்சித் தொண்டர்கள் செல்லும் நிலை ஏற்படும்.
நல்ல எதிர்காலம்
அண்ணாமலை நின்ற தொகுதியிலே அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரும், சீமானும் தேர்தலில் ஒரே தொகுதியில் நின்றாலும் அவரை விட சீமான்தான் அதிகமான வாக்குகள் பெறுவார். தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. எம்.ஜி.ஆரை போல தனது ரசிகர்களை கட்டமைத்து வைத்துள்ளார். ஆனால் விஜய் என்ன சொல்லப் போகிறார் என்று தான் தெரியவில்லை.
தி.மு.க. அரசு கொண்டு வந்த காலை உணவு திட்டம் வரவேற்கத்தக்கதாகும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பார்.
இவ்வாறு நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.