போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பா.ஜ.க. நிர்வாகி கைது

அரவக்குறிச்சியில் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-26 18:18 GMT

விபத்து

கரூர் மாவட்டம் தடாக்கோவில் அருகே உள்ள பால்வார்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் உதயகுமார். இவர் அரவக்குறிச்சி ஒன்றிய பா.ஜ.க. இளைஞரணி தலைவராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அரவக்குறிச்சி அருகே உள்ள தடாக்கோவில் பிரிவு சாலை அருகே கன்னியம்மாள் என்பவர் தனது செம்மறி ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று 2 செம்மறி ஆடுகள் மீது மோதியது.

இதில் அந்த 2 செம்மறி ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இந்த நிலையில் காரை ஓட்டி வந்தவர், செம்மறி ஆடுகளின் உரிமையாளரான கன்னியம்மாளிடம் ஆடுகள் உயிரிழந்ததற்கான இழப்பீட்டு தொகையை தந்து விடுவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில் இதனை அறிந்த உதயகுமார் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்று தடாக்கோவில் பிரிவு சாலையில் கார் மோதி 2 செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளது என கூறி பேசியுள்ளார்.

கைது

அப்போது போலீசார் அதற்கு சம்பந்தப்பட்ட நபர் புகார் தெரிவித்தால் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். அப்போது போலீசாருக்கும், உதயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உதயகுமார் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அரவக்குறிச்சி போலீசார் உதயகுமார் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்