பா.ஜனதா தேர்தல் அறிக்கை: தி.மு.க கடும் விமர்சனம்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜனதா முயற்சிப்பதாக தி.மு.க விமர்சித்துள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பொது சிவில் சட்டம் அமல், ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருந்தன.
பா.ஜனதாவின் இந்த தேர்தல் அறிக்கையை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் ஆளும் தி.மு.க, பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை சாடியுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜனதா முயல்கிறது. பா.ஜனதாவை ஏற்காத மாநிலங்களில் கூட அதன் கொள்கையை திணிப்பதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜனதா முயல்கிறது. ஓரிருவர் பா.ஜனதாவிற்கு ஆதரவாக இருந்தாலும் அதனை இந்த தேர்தல் அறிக்கை மாற்றிவிடும். தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்கள் பா.ஜ.க.வினர். தமிழ்நாட்டில் வாக்குகளை பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவதுதான் பா.ஜனதாவின் கொள்கை" என்றார்.