பா.ஜ.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; திருக்கழுக்குன்றத்தில் கடைகள் அடைப்பு- ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. பிரமுகரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக திருக்கழுக்குன்றத்தில் கடைகள் அடைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-12-20 10:41 GMT

அரிவாள் வெட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். பா.ஜ.க. பிரமுகர். இவர் திருக்கழுக்குன்றம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு பா.ஜ.க நிர்வாகி தனசேகரன் மற்றும் கஞ்சா வியாபாரம் செய்யும் 4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இரு தரப்பினரையும் விசாரித்து விட்டு தனசேகர் வீடு திரும்பியபோது, 4 பேர் கொண்ட மர்மகும்பல் தனசேகரனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றது. படுகாயம் அடைந்த தனசேகரன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கடைகள் அடைப்பு

தனசேகரன் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பஸ்நிலையம் அருகே பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகனராஜா தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் செல்வம், பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் இந்து அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து. சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அண்ணாமலை ஆறுதல்

பா.ஜ.க.வினர் அந்த பகுதியில் அதிக அளவில் திரண்டதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பா.ஜ.க. பிரமுகரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக அகமது பாஷா(வயது 33), மன்சூர் அலி(32), சையது அப்துல் ரஹமான்(20), இப்ராகீம்(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனசேகரனை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்