பெங்களூரு கூட்டத்தில் கலந்துகொண்டால் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பா.ஜ.க. போராடும் -அண்ணாமலை பேட்டி
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.;
ஆலந்தூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லை.
மேகதாது அணை கட்ட வேண்டும் என்று இல்லாத ஒரு பிரச்சினையை கர்நாடகாதான் கிளப்பியது. அதற்கும் தமிழக பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது.
மத்திய மந்திரிகள் கீழே உள்ள மாநிலங்களின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என கூறி விட்டனர். இதை மீண்டும் தொடங்கியது காங்கிரஸ் கட்சிதான்.
தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டப்படும் என காங்கிரஸ் கூறி உள்ளது. இதை பா.ஜ.க. எதிர்த்தது. ஆனால் தமிழக காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் எதிர்க்கவில்லை.
முதல்-அமைச்சருக்கு எதிராக போராட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு சென்றால்தான் தேசிய தலைவராக பார்ப்பார்கள் என நினைக்கிறாரே தவிர கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் கட்சியையும் கண்டிப்பதற்கு மனமில்லை.
பெங்களூருவில் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு எப்படி செல்ல முடியும்?, தமிழ்நாட்டின் தன்மானத்தை தாரை வார்த்துவிட்டு செல்வாரா?.
முதல்-அமைச்சர் கர்நாடகா சென்று விட்டு திரும்பி வந்தால் 'கோ பேக்' ஸ்டாலின் என ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டர்களும் விவசாயிகளும் பொது மக்களும் அவரது வீட்டின் முன்பு நிற்போம். விமான நிலையம் முன்பு கருப்பு நிற பலூன் பறக்கவிட்டு போராட்டம் நடத்துவோம்.
அரசியலுக்காக ஸ்டாலின் செல்லலாம். திரும்பி வரும்போது 'கோ பேக்' ஸ்டாலின் என பலூன் விடுவோம். போலீஸ் என்னிடம் இருக்கிறது என கைது செய்தாலும் கவலை இல்லை.
கர்நாடக நிலைப்பாடு
தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்?. ஒரு எம்.பி.யும் இல்லாத தமிழக பா.ஜ.க. அணை கட்ட முடியாது என சொல்லி வைத்து இருக்கிறோம். 38 எம்.பிக்கள் வைத்து உள்ள தி.மு.க. கூட்டணி கார்கே, சோனியாவை சொல்ல வைத்து கர்நாடக நிலைப்பாட்டை திரும்ப பெற வையுங்கள்.
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு செல்லுங்கள். கீழ் மாநிலங்களின் அனுமதி இல்லாமல் கட்ட முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டில் குழப்பம் இல்லை.
எம்.பி.க்கள் குழு
முல்லைப்பெரியாறு அணையில் உரிமைகள் விட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் நடக்க ஆரம்பித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி என்ன பயன்?, பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகியோரை சந்தித்து பேசுங்கள். டெல்லியில் பிரச்சினை இல்லை. பிரச்சினை இருப்பது பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அரசு. இதை சரி செய்ய வேண்டும். எம்.பிக்கள் குழு சித்தராமையாவை சந்திக்க வேண்டும்.
டெல்டா பகுதி உள்பட காவிரி எங்கெங்கு செல்கிறதோ அங்கு பிரச்சினை ஏற்பட போகிறது. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது பிரச்சினை இல்லை.
ஊழலை எதிர்க்கும் கட்சி
காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது பிரச்சினைகள் வருகிறது. குறுகிய அரசியல் லாபத்திற்காக பிரச்சினை ஏற்படுவதாக மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால் சரியாக இருக்கும் என்ற மன நிலை மக்களிடம் வந்து விட்டது.
ஊழலை முழுமையாக எதிர்க்கக்கூடிய ஒரே கட்சி பா.ஜ.க. மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் அஜித்பவார் வந்து உள்ளார். மத்திய அரசின் ஏஜென்சி தனது கடமையை தொடர்ந்து செய்ய தான் போகிறது. பா.ஜ.க. கூட்டணியில் வந்து உள்ளார் என்பதற்காக மத்திய அரசின் ஏஜென்சி சுதந்திரமாக செயல்படும். அதையும் இதையும் குழப்புவதற்கு எந்தவித தேவையில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.