மங்கலம் கண்மாயில் இனப்பெருக்கத்துக்காக குவிந்த பறவைகள்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் கண்மாயில் இனப்பெருக்கத்துக்காக ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன.;
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் கண்மாயில் இனப்பெருக்கத்துக்காக ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன.
மங்கலம் கண்மாய்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அமைந்துள்ளது மங்கலம் கிராமம். இந்த கிராமத்தில் கண்மாய் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழையால் மங்கலம் கண்மாயில் தற்போது வரை தண்ணீர் குறையாமல் இருந்து வருகின்றது.
இதனிடையே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் மழையே பெய்யாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்த்தங்கல், மேலச்செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் உள்ளிட்ட பறவைகள் சரணாலயங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் விட்டன. இதனால் ஏராளமான பறவைகள் சரணாலயங்களுக்கு வந்தும் தண்ணீர் இல்லாமல் திரும்பி சென்றுவிட்டன. மேலும் நீர்நிலைகளை தேடி பறவைகள் அலைந்து வருகின்றன.
பறவைகள் வந்து குவிந்தன
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மங்கலம் கண்மாயில் தண்ணீர் அதிக அளவு இருந்து வருவதால் அதுபோல் இந்த கண்மாயில் ஏராளமான காட்டு கருவேல மரங்களும் வளர்ந்து நிற்பதால் இனப் பெருக்கத்திற்காகவும் இரைதேடுவதற்காகவும் ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன. குறிப்பாக கருப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், வெள்ளை நிற கூழைக்கடா, செங்கால் நாரைகள், பாம்பு தாரா, சிறிய ரக வாத்துக்கள், நீர்காகங்கள் உள்ளிட்ட பல வகையான பறவைகள் இங்கு குவிந்துள்ளன.
அதுபோல் இந்த கண்மாயில் உள்ள காட்டு கருவேலசெடி மற்றும் வளர்ந்து நிற்கும் மற்ற செடிகளிலும் கருப்பு அரிவாள்மூக்கன், செங்கால் நாரைகள், செண்டு வாத்துக்கள் ஆகியவை கூடுகட்டியும், முட்டையிட்டு குஞ்சு பொரித்தும் வாழ்ந்து வருகின்றன. மங்கலம் கிராமத்தில் உள்ள பொதுமக்களும் கண்மாயில் உள்ள பறவைகளை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மாவட்டத்திலுள்ள பறவைகள் சரணாலயங்கள் பறவைகள் வராமலே வறண்டு போய் காட்சியளித்து வரும் நிலையில் மங்கலம் கண்மாயில் இந்த ஆண்டு இனப்பெருக்கத்திற்காக அதிகமான பறவைகள் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
==========
புட்நோட்