பறவைகள் இன்றி காணப்படும் தேர்த்தங்கல் சரணாலயம்

இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இதன் காரணமாக ராமநாதபுரம் அருகே உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் பறவைகள் இன்றி நிசப்தமாக காட்சி அளிக்கின்றன.;

Update:2023-01-04 00:15 IST

இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இதன் காரணமாக ராமநாதபுரம் அருகே உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் பறவைகள் இன்றி நிசப்தமாக காட்சி அளிக்கின்றன.

பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளில் ஏராளமான நாட்டு கருவேல மரங்களும், சீமை கருவேல மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து நிற்கின்றன. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உணவுக்காக இரையை தேடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்து கூடுகட்டி தங்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்து சீசன் முடிந்ததும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் திரும்பி செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக பெய்வதுடன் வைகை தண்ணீரும் வந்து நீர்நிலைகள் நிரம்பி பறவைகள் கூட்டம் கூட்டமாக இரை தேடி செல்வது வழக்கம்.

ஏமாற்றம்

தற்போது பருவமழை பொய்த்து போனதால் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மட்டும் வைகை தண்ணீர் வரத்தால் ஓரளவு நீர் உள்ளது. இந்த நீரில் உள்ள மரங்களில் கூடுகள் கட்டி தங்கியிருந்த பறவைகள் தற்போது மீண்டும் தங்கள் வாழ்விடத்தை நோக்கி சென்றுவிட்டன. இதற்கேற்ப தேர்த்தங்கல் சரணாலய பகுதி முழுவதும் கடும் நிசப்தமாகவே காட்சி அளிக்கிறது.

இதுபோன்ற சமயங்களில் பறவைகளின் ரீங்காரம் அந்த வழியாக செல்வோரை சரணாலயத்திற்கு இழுத்து வந்து மெய்மறக்க வைக்கும். ஆனால், தற்போது அதற்கு நேர்மாறாக சரணாலய பகுதி முழுவதும் பறவைகள் இன்றி காட்சி அளிக்கிறது. பறவைகளை கண்டு பரவசமடைந்திருந்த இப்பகுதி மக்கள் இந்த ஆண்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வெறிச்சோடியது

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்களிடம் கேட்டபோது கூறியதாவது:- பெரிய கண்மாயில் மட்டுமே ஓரளவு தண்ணீர் உள்ளது. ஆனால் மற்ற நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. சரணாலய பகுதியில் உள்ள மரங்களில் கூடுகட்டி தங்கியிருக்கும் பறவைகள் அருகில் உள்ள வயல்வெளிகளில் சென்று தானியங்கள், புழு பூச்சிகளை தின்று வரும்.

இந்த ஆண்டு அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. விவசாயமும் நெல்மணிகள் முளைக்கும் முன்னரே கருகிபோனதால் அதற்கு இரை கிடைக்கவில்லை. இதனால் இனியும் இங்கு இருப்பதில் பயனில்லை என்று தங்கள் வாழ்விடத்தை நோக்கி திரும்பி சென்றுவிட்டன என்றனர். மாவட்டத்திலேயே அதிக பறவைகள் வந்து செல்லும் தேர்த்தங்கல் சரணாலயத்தில் இந்த ஆண்டு பறவைகள் இன்றி வெறிச்சோடி காணப்படுவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்