இருமாநில எல்லை சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க ஏற்பாடு

இருமாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்தபடியே கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-18 13:39 GMT

சோதனை சாவடிகள்

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதை ஆகிய மலைப்பாதைகள் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இருமாநில எல்லைகளில் அமைந்துள்ள இந்த 3 மலைப்பாதைகளிலும் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடிகள் வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், சோதனை சாவடிகளில் போலீசார் பணம் வசூலித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இதையடுத்து கடத்தலை தடுக்கவும், முறைகேடுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் அதிரடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கண்காணிப்பு

தேனி மாவட்டத்தில் இருமாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி காட்ரோடு பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த கேமராக்களை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சோதனை சாவடிகளின் வழியாகவும் கடந்து செல்லும் வாகனங்கள் மற்றும் சோதனை சாவடியின் செயல்பாடுகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரிசி, மணல் கடத்தலை தடுக்கவும், சோதனை சாவடிகளில் பணியாற்றும் போலீசார் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் அளிக்காத வகையில் பணியாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன.

நவீன தொழில்நுட்பங்கள்

தற்போது சோதனை சாவடிகளில் தலா 4 கேமராக்கள் உள்ளன. அதில் வாகனங்களின் பதிவு எண்ணை புகைப்படம் எடுத்து சேமிக்கும் வகையில் கேமராவும் உள்ளது. இவ்வாறு வாகன பதிவு எண் பலகையை புகைப்படம் எடுப்பதோடு அவற்றின் விவரங்களை பட்டியலாக பெறும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சோதனை சாவடியை கடந்து சென்ற வாகனங்களின் பதிவு எண்களை பட்டியலாக பெற முடியும். அதன் மூலம் ஒரு வாகனம் சோதனை சாவடியை கடந்து சென்ற நேரத்தை தாமதமின்றி துல்லியமாக அறியமுடியும். மாவட்டத்தில் முக்கிய நகரங்களிலும் இந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்