அண்ணா பிறந்த நாளையொட்டி கள்ளக்குறிச்சியில், பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்

அண்ணா பிறந்த நாளையொட்டி கள்ளக்குறிச்சியில், பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-15 18:45 GMT

அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதை கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 13, 15 மற்றும் 17 வயது என 3 பிரிவுகளாக மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட மாணவ-மாணவிகள் கச்சிராயப்பாளையம் சாலை வழியாக குதிரைச்சந்தல் கைகாட்டியை சென்றடைந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் கூறும்போது, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி தனித்தனியாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் 4 முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.250 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கபடவுள்ளது. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) வேல்முருகன், உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்