பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்ந நாளையொட்டி திருவாரூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்;

Update: 2023-10-14 18:45 GMT

சைக்கிள் போட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி திருவாரூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. போட்டியினை கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது. பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

அப்போது கலெக்டர் சாருஸ்ரீ கூறியதாவது:-

உடற்தகுதி

அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி இளைஞர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக் 15 கி.மீ. தூரமும் என நடைபெற்றது.இந்த போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சைக்கிள் போட்டி நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகராட்சி ஆணையர் மல்லிகா, நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா, தாசில்தார் நக்கீரன் உள்பட பொதுமக்கள் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்