பவானிசாகர்
பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்தது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
பவானிசாகர் அணையின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்கள் வழியாக சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பவானிசாகர் அணை தன் முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது.
நீர்மட்டம் சரிந்தது
இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது.
தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து 95 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.82 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,078 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் வினாடிக்கு 1,100 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.