பாரதி-செல்லம்மாள் 126-வது திருமண நாள் விழா; சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

கடையத்தில் பாரதி-செல்லம்மாள் 126-வது திருமண நாள் விழா நடந்தது. விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.

Update: 2023-06-27 18:45 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள கற்றல் கல்வி மையத்தில் பாரதி- செல்லம்மாளின் 126-வது திருமண நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சேவாலய நிறுவனர் மற்றும் நிர்வாகி முரளிதரன் வரவேற்றார். முன்னதாக காலையில் செல்லம்மாள் பாரதி பல்லக்கு வீதி உலா நடைபெற்றது. அதை தொடர்ந்து சேவாலயா பள்ளி மாணவ-மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது. இதனை நெல்லை நடன ஆசிரியர் பாரதி பணி செல்வி விசாலாட்சி நடத்தினார்.

சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு பாரதி, செல்லம்மாள் சிலைக்கு மாலை அணிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சபாநாயகர் பேசுகையில், "செல்லம்மாள், பாரதியுடன் கடுமையான போராட்டத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் இல்லை என்றால் பாரதியின் கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் வெளியே தெரியாமல் போயிருக்கும். கடையத்திற்கு பெருமை சேர்த்தவர் செல்லம்மாள். கடையம் சத்திரம் பாரதி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு செல்லம்மாள் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். இதனை கண்டிப்பாக பரிசீலனை செய்வேன்" என்றார்.

விழாவில் பாரதியாரின் கவிதையால் அவரது ஓவியத்தை வரைந்த சிறுமியை சபாநாயகர் அப்பாவு பாராட்டினார். விழாவில் பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். சேவாலய திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்