பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
அன்னவாசல்:
இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி ஆ.ராசா எம்.பி.யை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அன்னவாசல் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் முருகையா தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய தலைவர்கள் செல்லத்துரை, ரெங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் தி.மு.க.வை கண்டிக்கிறோம். அதேபோல இந்து பெண்களை அவமதித்து இழிவுபடுத்தி பேசிய ஆ.ராசாவை கண்டிக்கிறோம். ஆ.ராசாவை கண்டிக்காத தி.மு.க. தலைமையையும் கண்டிக்கிறோம். தமிழக அரசு உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணை தலைவர் சிவசாமி கண்டியர், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகேந்திரன், மாவட்ட பொது செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.