பா.ஜனதா அலுவலகத்தில் கோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும் -அண்ணாமலை பேட்டி
விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் கோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும் என அண்ணாமலை கூறினார்.;
விருதுநகர்,
விருதுநகரில் நேற்று காலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். பாண்டியன் நகரில் இருந்து தொண்டர்களுடன் நடைபயணத்தை தொடங்கிய அவரை மகளிர் அணியினர் மலர் தூவி வரவேற்றனர்.
பா.ஜனதா நிர்வாகி ஒருவரின் கடைக்கு சென்று டீ குடித்தார். தட்டச்சு பயிற்சி நிறுவனத்திற்கு சென்று, அங்கு பயிற்சி பெறுபவர்களுடன் கலந்துரையாடினார்.
முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராமமூர்த்தி ரோடு, ரெயில்வே பீடர் ரோடு வழியாக வந்த அவர், காந்திபுரம் தெருவில் இம்மானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பழைய பஸ் நிலையம், வெயிலுகந்த அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள், மெயின் பஜார் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பேட்டி
பின்னர் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
விருதுநகர் தொகுதியோடு சேர்த்து இதுவரை 22 சட்டமன்ற தொகுதிகளில் நடை பயணம் நிறைவடைந்துள்ளது. 5,500 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 600 மனுக்கள் மத்திய அரசு சார்ந்தவை. அவற்றை நாங்கள் மத்திய அரசிடம் தர உள்ளோம். இதற்கென பா.ஜனதாவில் தனிப்பிரிவு ஏற்படுத்தி மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்.
காமராஜர் பெயரில் அமைக்கப்பட்ட விருதுநகர் புதிய பஸ் நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத நிலையில் தற்போது அந்த பஸ் நிலையத்தின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இந்த பஸ் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு தேர்தல் வாக்குறுதிப்படி வேலை வாய்ப்பு அளிக்கவில்லை. தேசிய அளவில் தமிழகம்தான் கடன் பெற்றுள்ளதில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு மேல் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி வேண்டும்.
ஜவுளிபூங்கா
மத்திய அரசு விருதுநகரில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 22 ஆயிரம் பேருக்கு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். மாவட்ட அமைச்சர்கள் இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாரத மாதா சிலை
கோர்ட்டு மூலம் உரிய அனுமதி பெற்று, விருதுநகர் மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் பாரத மாதா சிலை வைக்கப்படும். மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம் கைவிடப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.