நெல்லை-செங்கோட்டை இடையே மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் இயக்கம்
நெல்லை-செங்கோட்டை இடையே நேற்று மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் இயக்கப்பட்டது.
நெல்லை-செங்கோட்டை இடையேயான 72 கி.மீ. தூர ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடந்து முடிந்தது. இந்த பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு தயாரானது. இதற்கு முன்னோட்டமாக கடந்த மே மாதம் அந்த பாதையில் மின்சார ரெயில் என்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
70 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட அந்த என்ஜின் நெல்லையில் இருந்து புறப்பட்டு தென்காசி வரை சென்று மீண்டும் நெல்லைக்கு வந்தது. அதன் பிறகு 4 மாதங்களாக மின்சார என்ஜின் பொருத்தப்படாமல் டீசல் என்ஜின் மூலமாகவே ரெயில் இயக்கப்பட்டு வந்தது. மின்சார என்ஜின் தட்டுப்பாட்டு காரணமாக மின்சார ரெயில் இயக்கப்படாமல் இருந்தது.
மின்சார ரெயில் இயக்கம்
இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் புறப்பட்டு சென்றது.
இந்த ரெயில் நெல்லை டவுன், பேட்டை சேரன்மாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றது.
அந்த என்ஜின், அம்பை ரெயில் நிலையத்தில் கிராசிங்கிற்காக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது பயணிகள் அதை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். இதைத் தொடர்ந்து செங்கோட்டையில் இருந்தும் நெல்லைக்கு மின்சார ரெயில் இயக்கப்பட்டது.
பயணிகளுக்கு இனிப்பு
முன்னதாக செங்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் ரெயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நெல்லை-செங்கோட்டை வழித்தடத்தில் அனைத்து ரெயில்களும் நேற்று மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டன.