கோவில்பட்டி-கடம்பூர் இடையேபுதிய மின்மய இரட்டை ரெயில்பாதை தயார்

கோவில்பட்டி-கடம்பூர் இடையே புதிய மின்மய இரட்டை ரெயில்பாதை தயார் நிலையில் உள்ளது. இந்த ரெயில் பாதையை தென்சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் புதன்கிழமை ஆய்வு செய்கிறார்.;

Update: 2023-01-10 18:45 GMT

கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை ரெயில்பாதை பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த பணியை தென்சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் இன்று(புதன்கிழமை) ஆய்வு செய்கிறார்.

இரட்டை ரெயில் பாதை

தென் தமிழகத்தில் அதிவேக ரயில்களை இயக்கவும், பயண நேரத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் கடந்த 2018-ம் ஆண்டில் மதுரை-தூத்துக்குடி இடையிலான 160 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.11 ஆயிரத்து 822 கோடி மதிப்பில் புதிதாக இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு பகுதியாக முடியும்போது முடிவுற்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வாஞ்சி மணியாச்சி- தட்டப்பாறை, வாஞ்சி மணியாட்சி - கங்கைகொண்டான், வாஞ்சி மணியாட்சி - கடம்பூர் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து உள்ளது.

தலைமை மின்பொறியாளர்

இந்த நிலையில் கோவில்பட்டி - கடம்பூர் ரெயில் நிலையங்கள் இடையே 22 கிலோ மீட்டர் தூர மின்மய இரட்டை ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த புதிய மின்மய இரட்டை ரெயில் பாதையில் தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவர் கடம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் ஆய்வு பணியை தொடங்கினார். அப்போது ரெயில்வே கேட்டுகள், கடம்பூர் துணைமின் நிலையம், தமிழ்நாடு மின்சார வாரிய மின்தடை குறுக்கீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அவருடன் கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதன்மை மின் வழங்கல் பிரிவு பொறியாளர் சுந்தரேசன், மின் மயமாக்கல் பிரிவு பொது மேலாளர் ராமநாதன், ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட மின்மயமாக்கல் பொறியாளர் பச்சு ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு

மேலும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவில்பட்டி - கடம்பூர் ரெயில் பாதை பிரிவில் புதிய இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதனுடைய இணைப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த புதிய இரட்டை ரெயில் பாதையை பெங்களூர் தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார். அவர் காலை 9 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து மோட்டார் டிராலி மூலம் ஆய்வை தொடங்குகிறார். தொடர்ந்து ரெயில் தண்டவாள பணிகள், மின்மயமாக்கல் பணிகளை ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வு மதியம் 1.30 மணிக்கு கடம்பூரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 5 மணி வரை கோவில்பட்டியில் இருந்து கடம்பூர் வரை புதிய இரட்டை ரெயில்பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள், ரெயில் பாதை அருகே வசிப்போர் ரெயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்