வெற்றிலை விலை 'கிடு கிடு' உயர்வு
உடன்குடியில் வெற்றிலை விலை ‘கிடு கிடு’ வென உயர்த்தி விற்கப்படுகிறது.
உடன்குடி:
உடன்குடியில் வெற்றிலை விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.242-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெற்றிலை விவசாயம்
உடன்குடி கருப்பட்டியை போன்று, இப்பகுதியில் விளையும் வெற்றிலைக்கும் மவுசு உண்டு. முன்பு நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உடன்குடியில் இருந்து தினமும் 500 கிலோ வெற்றிலை வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதால், உடன்குடி வெற்றிலை விளைச்சல் நாளுக்கு நாள் குறைந்து உடன்குடிக்கு தேவையான வெற்றிலை, வெளியூரில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரும் நிலை உருவானது.
பாதிப்பு
உடன்குடி சுற்று வட்டாரபகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடியில் கடல் நீர் புகுந்து, விவசாய நிலம் உவர்ப்பு நிலமாக மாறியது. இதனால் வெற்றிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது உடன்குடியில் ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றிலை கொடிக்கால் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. விளைச்சல் குறைவாக இருந்ததால், ஒரு கிலோ வெற்றிலை ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
விலை உயர்வு
தற்போது கோவில் கொடை விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்து வருவதால் வெற்றிலை விலையும் கிடுகிடு அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு கிலோ வெற்றிலை ரூ.242-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று கொட்டப்பாக்கு ஒன்று ரூ.5- க்கும் விற்பனையாகிறது.