பெல் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி போராட்டம்

பெல் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி போராட்டம் நடந்தது.

Update: 2023-08-15 21:59 GMT

பொன்மலைப்பட்டி:

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன வளாகத்தில் உள்ள மருத்துவமனை பெல் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சேவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 16 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து 33 நாட்களாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று பெல் வளாகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 16 ஒப்பந்த தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு பணியில் இருந்த போலீசார், கஞ்சி காய்ச்சிய பாத்திரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருச்சி மாவட்ட பொதுநல அமைப்புகள் சார்பாக பெல் ட்ரெய்னிங் சென்டர் முன்பு உள்ள இணைந்த கரங்கள் சின்னத்தை கருப்புத் துணியால் போர்த்தும் போராட்டம் அறிவித்தனர்.

பின்னர் போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு திருச்சி மாவட்ட பொதுநல அமைப்புகள் பெல் நிர்வாகத்தை கண்டித்து சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், அமைப்புசாரா தொழிலாளர் இயக்கம் ஷைனி, மக்கள் கலை இலக்கிய மாவட்ட செயலாளர் ஜீவா, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் அங்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு போராட்டம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்