பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்ததை தட்டி கேட்டதால் வனக்காப்பாளர் மீது சரமாரி தாக்குதல்

கும்பக்கரை அருவியில் குளித்தபோது பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்ததை தட்டிகேட்டதால் வனக்காப்பாளரை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2022-06-24 16:45 GMT

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிக்க தினந்தோறும் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த சரவணக்குமார் (வயது 52), அவரது நண்பர்களான கந்தசாமி (51), பாலமுருகன் (44) உள்பட 5 பேர் கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்தனர். இதையடுத்து அருவியில் குளித்தபோது அவர்கள் அங்கிருந்த பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக கூறப்படுகிறது.

இதனை அந்த பெண்கள் கண்டித்தனர். பின்னர் அவர்கள் வனக்காப்பாளர் பீமராஜிடம் புகார் செய்தனர். இதையடுத்து அவர் வந்து தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் மோதலாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து பீமராஜீவை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் இந்த தாக்குதலில் சரவணக்குமாரும் காயமடைந்தார். இதையடுத்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமி, பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதற்கிடையே வனக்காப்பாளரை 3 பேர் சரமாரியாக தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனக்காப்பாளரை தாக்கிய 3 பேரும் முன்னாள் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்