அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் கூறினார்.

Update: 2022-12-18 18:45 GMT

பொறையாறு:

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:- மோகன்தாஸ்: ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம் போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

சாந்தி: ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும். அன்னப்பன்பேட்டை விவேகானந்தர் தெருவில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். சக்கரபாணி: மருதூர் நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்து வகுப்பறை கட்டிடம் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக ஒரு வகுப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும்.

மயான சாலை வேண்டும்

ராஜ்கண்ணன்: மடப்புரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மடப்புரம் இந்திரா நகரில் ஆதிதிராவிடர் மயான சாலை அமைக்க வேண்டும்.முத்துலட்சுமி: ஆறுபாதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் பகுதிநேர அங்காடி அமைத்து தர வேண்டும். ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் மயிலாடுதுறை நகர பாதாள சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினி: சேமங்கலம் ஊராட்சி புதுப்பேட்டை கிராமம் அய்யாவையனாற்றின் குறுக்கே பல ஆண்டுகளாக உள்ள மரப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக சிமெண்டு பாலம் அமைக்க வேண்டும். சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை ஆகிய ஊராட்சிகளில் மயான சாலை அமைத்து தர வேண்டும்.

நிறைவேற்றப்படும்

ஒன்றியக்குழு தலைவர்: செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நேரில் சென்று பார்வையிட்டு நிறைவேற்றப்படும். தற்போது உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதில் மாவட்ட கவுன்சிலர்கள் வெண்ணிலா தென்னரசு, துளசிரேகா ரமேஷ் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்